ADDED : ஜன 26, 2024 02:43 AM
சென்னை:தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிக்கை:
''தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், வழக்கமாக ஆண்டுதோறும், அக்டோபரில் நெல் கொள்முதலை துவங்கும். இந்த முறை, விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, செப்.1ல் துவக்கியது. இதுவரை, 5.54 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 87,811 விவசாயிகளின் வங்கி கணக்கில், 1,258 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை, திருவாரூர், கடலுார், நாகை, மயிலாடுதுறை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும், 957 கொள்முதல் நிலையங்கள் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, 195 நிலையங்கள் செயல்படுகின்றன. விவசாயிகள் எப்போது கொண்டு வந்தாலும், கொள்முதல் செய்ய தயார் நிலையில் உள்ளன.
தேவைப்படும் இடங்களில் கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல் கொள்முதல் செய்ய கலெக்டர்கள் கூட்டத்திலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நடப்பு சீசனில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய, தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதால், விவசாயிகள் தங்கள் நெல்லை வழங்கி பயன்பெறலாம்.

