மும்பையில் படகுகள் மோதி விபத்து 13 பேர் பலி: 101 பேர் மீட்பு
மும்பையில் படகுகள் மோதி விபத்து 13 பேர் பலி: 101 பேர் மீட்பு
ADDED : டிச 19, 2024 04:32 AM

மும்பை : மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், சுற்றுலா பயணியர் சென்ற பெரிய படகின் மீது, கடற்படையின், 'ஸ்பீட்போட்' எனப்படும் அதிவேக படகு வந்து பக்கவாட்டில் மோதியதில், 10 பயணியர் மற்றும் மூன்று கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் மையப் பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களில் முக்கியமானது, கேட் வே ஆப் இந்தியா. இங்கிருந்து கடலுக்கு நடுவே எலிபென்டா தீவில், ஏழாம் நுாற்றாண்டு குகை கோவில் உள்ளது.
கேட் வே ஆப் இந்தியாவில் இருந்து எலிபென்டா தீவுக்கு தினசரி படகு போக்குவரத்து சேவை உள்ளது. இதை நுாற்றுக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.
நேற்று பிற்பகல் நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியருடன் 'நீல்கமல்' என்ற படகு எலிபென்டா தீவுக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது பக்கவாட்டில் வளைந்து நெளிந்து அதிவேகமாக சென்ற கடற்படை படகு ஒன்று, திடீரென திரும்பி வந்து பயணியர் படகு மீது மோதியது. பயணியர் படகில் இருந்த ஒருவர் இதை வீடியோ எடுத்துள்ளார்.
கடற்படை படகு மோதியதில் நீல்கமல் படகில் இருந்த பயணியர் பலர் கடலுக்குள் விழுந்தனர்; விபத்தினால் உருக்குலைந்த படகு கடலுக்குள் மூழ்க துவங்கியது. இதனால் பயணியர் அலறினர்.
இது பற்றி தகவல் அறிந்த கடற்படையினர், கடலோர காவல் படையினர் 14 படகுகளில் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இது தவிர நான்கு ஹெலிகாப்டர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டன. இந்த விபத்தில், பயணியர் படகில் சென்ற 10 பேர் மற்றும் கடற்படை வீரர்கள் மூவர் உயிரிழந்தனர்.
படகில் சென்ற பயணியர் பலரும் 'லைப் ஜாக்கெட்' எனப்படும் தண்ணீரில் மூழ்காமல் இருப்பதற்கான உடையை அணிந்திருந்தனர். இதனால் கடலின் மேற்பரப்பில் தத்தளித்த 101 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கூறினார்.