sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மத்திய அரசை எதிர்த்து 13 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்; தமிழகத்தில் பாதிப்பில்லை

/

மத்திய அரசை எதிர்த்து 13 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்; தமிழகத்தில் பாதிப்பில்லை

மத்திய அரசை எதிர்த்து 13 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்; தமிழகத்தில் பாதிப்பில்லை

மத்திய அரசை எதிர்த்து 13 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்; தமிழகத்தில் பாதிப்பில்லை

12


UPDATED : ஜூலை 09, 2025 01:40 PM

ADDED : ஜூலை 08, 2025 11:43 PM

Google News

UPDATED : ஜூலை 09, 2025 01:40 PM ADDED : ஜூலை 08, 2025 11:43 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : மத்திய அரசை எதிர்த்து, 13 தொழிற்சங்கங்களின் ஊழியர்கள், இன்று (ஜூலை 9) பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்கள், குறைந்த ஊழியர்களுடன் செயல்படும். தமிழகத்தில் ஆசிரியர் சங்கங்கள், வருவாய் துறை அலுவலர் சங்கங்கள் போன்றவை, வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால், இன்று வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது என, மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக கேரளா, மேற்குவங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால், மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்; மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்...

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்பது உட்பட, 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - தொ.மு.ச., - ஐ.என்.டி.யு.சி., உட்பட, 13 தொழிற்சங்கங்கள், இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளன.

இப்போராட்டத்திற்கு தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ, வருவாய் துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம், போக்குவரத்து, மின்சார தொழிற்சங்கங்கள் போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், இன்று வங்கிகள், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டன.

தமிழக நிலவரம்

வேலை நிறுத்தத்தால், எந்தவித பாதிப்புமின்றி, தமிழகம் முழுதும் முழு அளவில் பஸ்கள் இயக்கப்படும் என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ்கள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளன. பந்த் காரணமாக, தமிழகத்தில் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணிகள் பாதிக்கப்பட்டாலும், பொதுப்போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியது. கடைகள், வணிக வளாகங்கள் எப்போதும் போல் திறந்திருந்தன. ஆட்டோ, டாக்சிகள் இயக்கப்பட்டன. ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. மாநில அரசு அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டன. முக்கிய நகரங்களில் தொழிற்சங்கத்தினர் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர்.



புதுச்சேரி


புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகள் விடுமுறையை அறிவித்துள்ளன. சில பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டன.

மேற்குவங்கம்


பந்த் காரணமாக, மேற்கு வங்க மாநிலத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். கோல்கட்டாவில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. துர்காபூர், ஜாதவ்புர், முர்ஷிதாபாத், பாரக்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் தண்டவாளங்களில் மறியலில் ஈடுபட்டனர். எனினும் ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தி இருந்ததால், அரசு அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டன. இடதுசாரி தொழிற்சங்கத்தினரும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் போலீசாருக்கும், அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கேரளா முடங்கியது


கேரளாவில் முக்கிய நகரங்களில் கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. குறைந்த அளவு எண்ணிக்கையிலான அரசு பஸ்களே இயக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலம் நடத்தினர்.

கர்நாடகா


காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் கர்நாடகாவில், பந்த் முற்றிலும் பிசுபிசுத்தது. பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் அரசு பஸ், ஆட்டோ, வாகனங்கள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கின. இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை. இடதுசாரி தொழிற்சங்கத்தினர் முக்கிய நகரங்களில் ஊர்வலம் நடத்தினர்.

பா.ஜ., ஆளும் மாநிலங்கள்

பா.ஜ., ஆட்சி செய்யும் மாநிலங்களில் பந்த் காரணமாக பாதிப்பு எதுவும் இல்லை. அரசு ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மட்டுமே வெவ்வேறு இடங்களில் நடந்தன.



முன்னதாக, அரசு அலுவலகங்களுக்கு தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அகில இந்திய அளவில், சில அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டத்தில் பங்கேற்பது, அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கும்.

எனவே, தமிழக அரசு ஊழியர்கள், நடத்தை விதிகளை மீறும் செயல்களில் ஈடுபடக்கூடாது. மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் யாராவது அலுவலகத்திற்கு வரவில்லை என்றால், அவர்கள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். பகுதி நேர ஊழியர்கள், தினசரி ஊதியம் பெறுவோர் பணியில் இருந்து நீக்கப்படுவர்.

இன்று பணிக்கு வருவோர் விபரங்களை, துறைகளின் செயலர்கள், காலை 11:00 மணிக்குள், மனிதவள மேலாண்மை துறைக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட கலெக்டர்கள், தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வருகை விபரங்களை, வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்திற்கு, காலை 10:15 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

தற்காலிக விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு தவிர, வேறு எந்த விடுப்புக்கும் விண்ணப்பிக்க, ஊழியர்களுக்கு இன்று அனுமதியில்லை. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

தி.மு.க., தொழிற்சங்கமான தொ.மு.ச.,வின் தலைவர் நடராஜன், சி.ஐ.டி.யு., பொதுச்செயலர் ஆறுமுக நயினார் ஆகியோர் கூறியதாவது: இன்று நடக்கும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில், தமிழகத்தில் தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - ஐ.என்.டி.யு.சி., உட்பட 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. சென்னையில் அண்ணா சாலை, கிண்டி, அம்பத்துார், திருவொற்றியூரில் மறியல் போராட்டம் நடக்கும். இவ்வாறு கூறினர்.

அ.தி.மு.க., பங்கேற்காது

இன்றைய வேலை நிறுத்தத்தில், அ.தி.மு.க., தொழிற்சங்கம் பங்கேற்கவில்லை என, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் கமலக்கண்ணன் கூறியுள்ளார். தி.மு.க., அரசு பதவி ஏற்ற பின், நான்கரை ஆண்டுகளில், தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தொழிலாளர்களை ஏமாற்றி வருகிறது. ஏதோ தமிழக அரசு, தொழிலாளர்களின் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து விட்டது போல, மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்வது, வெறும் கண்துடைப்பு. இதைச் சுட்டிக்காட்டி. அண்ணா தொழிற்சங்க பேரவை, வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us