ADDED : செப் 05, 2025 03:31 AM

கடலுார்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 130 திருமணங்கள் நடந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடலுார் அடுத்த திரு வந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் திருமணம் நடந்தால் குடும்பம் சிறப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதனால் இங்கு திருமணங்கள் நடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இக்கோவிலில் ஒரே நாளில் 100 முதல் 250க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன.
இந்நிலையில், நேற்று ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்தம் என்பதால் அதிகாலை 4:00 மணி முதல் திருமணங்கள் நடந்தன. கோவில் மண்டபத்தில் 105 திருமணங்கள், கோவிலை சுற்றியுள்ள தனியார் மண்டபங்களில் 25 திருமணங்கள் என, மொத்தம் 130 திருமணங்கள் நடந்தன. திருமணம் முடிந்து மணமக்கள், பெற்றோர், உறவினர்களுடன் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
கோவில் வளாகத்தில் போலீசார் வாகனங்களை அனுமதிக்கவில்லை. இருப்பினும் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.