பட்டாசு ஆலைகள் விபத்தில் 5 ஆண்டுகளில் 131 பேர் பலி : உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
பட்டாசு ஆலைகள் விபத்தில் 5 ஆண்டுகளில் 131 பேர் பலி : உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
ADDED : பிப் 13, 2024 03:52 AM
மதுரை : விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலைகள் விபத்தில் பாதிக்கப்பட்டோர் சிலர், இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதில், நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
விருதுநகர் மாவட்டத்தில், 1,087 பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள், 2,963 சில்லரை விற்பனை நிலையங்கள் உள்ளன. அவற்றின் வாயிலாக மக்கள் வருவாய் ஈட்டுவதாக கலெக்டர் அறிக்கை அளித்துள்ளார்.
தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய நிபந்தனைகளுடன் தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. சில யூனிட்களில் நிபந்தனைகளை பின்பற்றாததால் விபத்துகள் நடக்கின்றன.
தீ விபத்துகளை தடுக்க மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 முதல் தற்போது வரை 69 விபத்துகளில், 131 பேர் இறந்துள்ளனர்; 146 பேர் காயமடைந்தனர் என, எஸ்.பி., அறிக்கை அளித்துள்ளார்.
உராய்வு, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமை, பணியாளர்கள், போர்மேன்களின் அலட்சியம், வெடிமருந்துகளை தவறாக கையாள்வதால் விபத்து ஏற்படுகிறது.
இந்தியாவில், 58 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக மத்திய அரசு கண்டறிந்துள்ளது. அதில் விருதுநகரும் ஒன்று. மக்களுக்கு வேலை வழங்குவதில் பட்டாசு ஆலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தீ விபத்துகளை தடுக்க, ஏழை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதிசெய்ய முறையான வழிமுறைகள் இல்லை என, தோன்றுகிறது.
விபத்துகளை தடுக்க, மாவட்ட பாதுகாப்பு குழு, திறம்பட செயல்படுவதில் முன்னேற்றமும் இல்லை. உரிம நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்த எந்த வழிமுறையும் இல்லை.
பட்டாசு ஆலைகள் சங்கமான, 'டான்பாமா' தரப்பு, 'எங்கள் சங்கத்தில் 280 உறுப்பினர்கள் உள்ளனர். நிபந்தனைகள், விதிமுறைகளை பின்பற்றி யூனிட்களை முறையாக நடத்துகின்றனர். விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளன. இத்தொழிற்சாலைகளில் 5 ஆண்டுகளில் 4 விபத்துகள் மட்டுமே நடந்துள்ளன; 3 பேர் இறந்தனர்' என, தெரிவித்தது.
கலெக்டர், 1,087 ஆலைகள் உள்ளதாக குறிப்பிடுகிறார். சங்கங்களுடன் இணைக்கப்படாத பிற தொழிற்சாலைகள் அங்கு இருப்பது தெரிகிறது.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, இறுதி உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கை ஒத்தி வைத்தார்.