வீட்டு வாரியத்தில் 13,515 வீடு, மனை விற்பனைக்காக காத்திருப்பு
வீட்டு வாரியத்தில் 13,515 வீடு, மனை விற்பனைக்காக காத்திருப்பு
ADDED : ஏப் 11, 2025 12:22 AM
சென்னை:தமிழகத்தில் விற்காமல் முடங்கிய, வீட்டு வசதி வாரியத்தின் 20,541 வீடு, மனைகளில், கடந்த நான்கு ஆண்டுகளில் 7,026 மட்டுமே விற்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 13,515 வீடு, மனைகள் விற்பனையாகாமல் உள்ளன.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், வீட்டுவசதி வாரியம் சார்பில் வீடு, மனைகள் அடங்கிய குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பொதுவாக வாரியத்தில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால், அதில், வீடு, மனைகள் வாங்க, கடுமையான போட்டி இருக்கும். உதாரணமாக, 200 வீடுகள் விற்பனைக்கு வந்தால், 30,000 பேர் வரை விண்ணப்பிப்பர்.
அவர்களில் குலுக்கல் வாயிலாக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, வீடு, மனைகள் ஒதுக்கப்படும். ஆனால், 2011க்கு பின், வாரியம் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துவதில், சில மாற்றங்களை செய்தது.
இதன்படி, சுயநிதி முறையில் முன்கூட்டியே பணம் வாங்கி, அதை வைத்து வீடு கட்டிக் கொடுக்கும் முறைக்கு, வீட்டுவசதி வாரியம் மாறியது. அதிக விலை மற்றும் கூடுதல் கெடுபிடிகள் காரணமாக, மக்கள் வீடு வாங்க முன்வருவது குறைந்தது.
இதனால், 10 ஆண்டுகளில் கட்டப்பட்ட திட்டங்களில், 20,541 வீடு, மனைகள் விற்பனையாகாமல் தேங்கின. கடந்த நான்கு ஆண்டுகளாக அவற்றை விற்க பல்வேறு முயற்சிகள் எடுத்தும், 7,026 வீடுகள் மட்டும் விற்பனையாகி உள்ளன.
இவை குறித்து, வீட்டுவசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாரியத்தின் திட்டங்களில் தேக்கமடைந்த வீடு, மனைகளை விற்க, 'இ - மார்க்கெட்டிங்' எனப்படும் இணைய வழி வர்த்தகம், சமூக வலைதளம் போன்ற வழிகளில் விற்பனைக்கு முயற்சித்து வருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில், 7,026 வீடு, மனைகள் விற்பனை செய்யப்பட்டன.
தற்போதைய நிலவரப்படி, 8,563 மனைகள், 4,735 அடுக்குமாடி வீடுகள், 217 தனி வீடுகள் என மொத்தம் 13,515 வீடு, மனைகள் விற்பனைக்கு காத்திருக்கின்றன.
இந்த வீடு, மனைகளை விற்பதற்கு, கூடுதல் சலுகைகள் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

