ADDED : செப் 23, 2026 11:34 PM
சென்னை: ரயில் பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக, 14 'ட்ரோன்'கள் வாயிலாக, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி, சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருவனந்தபுரம் உட்பட, பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில், பயணியரின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய, தெற்கு ரயில்வே, பல்வேறு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ரயில் நிலையங்கள், ரயில்களில் வழக்கமாக நடக்கும் திருட்டுகள், கடத்தல்களை தடுக்க, பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய, தெற்கு ரயில்வேயில், முதல் முறையாக 14 ட்ரோன்கள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ட்ரோனும், ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ., துாரம் வரை கண்காணிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
