14 தொகுதி; 1 ராஜ்யசபா பதவி கூட்டணிக்கு பிரேமலதா நிபந்தனை
14 தொகுதி; 1 ராஜ்யசபா பதவி கூட்டணிக்கு பிரேமலதா நிபந்தனை
ADDED : பிப் 08, 2024 02:08 AM

சென்னை:லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, சென்னை கோயம்பேடில் உள்ள கட்சி அலுவலகத்தில், அக்கட்சி மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது. விஜயகாந்த் மறைவிற்கு பின் நடந்த இந்த கூட்டத்தை, அவரது மனைவி பிரேமலதா வழிநடத்தினார்.
விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்க பரிந்துரைத்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசிற்கும் நன்றி தெரிவிப்பது உட்பட, 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டணி தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட செயலரிடமும் கருத்து கேட்கப்பட்டது. கூட்டணி முடிவு எடுக்கும் அதிகாரம் பிரேமலதாவிற்கு வழங்கப்பட்டது.
பின், பிரேமலதாகூறியதாவது:
லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று, மாவட்ட செயலர்கள் கருத்து தெரிவித்தனர்.
இருந்தபோதும், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அல்லது தனித்துப் போட்டி என்ற நான்கு வழிகள் எங்களுக்கு உள்ளன.
தே.மு.தி.க.,விற்கு 2014 தேர்தலில் வழங்கியதுபோல, 14 லோக்சபா தொகுதிகள், 1 ராஜ்யசபா 'சீட்' வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். இனிமேல்தான் கூட்டணி பேச்சு நடத்த குழுஅமைக்கப் போகிறோம்.
அதற்குள் கூட்டணி, தொகுதி தொடர்பாகமீடியாக்களில் செய்திகள் வருகின்றன. யூகங்கள் அடிப்படையில் செய்திகளை போட வேண்டாம்.
என் மகன் விஜயபிரபாகரன் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என, மாவட்ட செயலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
விஜயகாந்த் நினைவு அஞ்சலி கூட்டத்தை, நான்கு மண்டலங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. எந்தெந்த இடங்களில் கூட்டம் நடக்கும் என்பது, விரைவில் அறிவிக்கப்படும்.
நாங்கள் கேட்கும் இடங்களை தரும் கட்சியுடன் தான் கூட்டணி அமைக்கப்படும். தேவைப்பட்டால் கூட்டணி முடிவெடுக்க, மீண்டும் மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு பிரேமலதா கூறினார்.

