காடுகள் வளர்ப்புத்திட்டத்தில் 146 கிராமங்கள் தத்தெடுப்பு
காடுகள் வளர்ப்புத்திட்டத்தில் 146 கிராமங்கள் தத்தெடுப்பு
ADDED : பிப் 19, 2025 02:16 AM
தேனி:தேனி மாவட்ட வனத்துறை, ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் தமிழ்நாடு காடுகள் வளர்ப்புத்திட்டத்தில் மாவட்டத்தில் 146 கிராமங்களை தத்தெடுத்து வனக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காடுகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும், காடுகள் அழிப்பு, காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்கவும் தமிழ்நாடு காடுகள் வளர்ப்புத் திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டம் 1997 -- 1998 முதல் 2004 -- 2005 வரை 8 ஆண்டுகளில் ரூ.688 கோடி மதிப்பில் ஜப்பான் நிதியுதவியுடன் கிராம வனக்குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டன.
இதில் முறையாக கடனை திருப்பி செலுத்தியவர்களுக்கு தற்போது நிதியுதவி வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான முகாம்கள் அனைத்து வனச்சரகங்களிலும் நடக்கிறது.
இந்த வனக்குழுவில் 10 பேர் உறுப்பினர்களாகவும், வனச்சரகர் செயலாளராகவும், அக்கிராமத்தில் தலைவர்களில் ஒருவர் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வனக்குழுக்களில் உள்ள சுய உதவி பெண்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியுதவியை திரும்ப செலுத்தியிருந்தால் மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
இத்திட்டத்தில் தேனி மாவட்டத்தில் 146 கிராமங்களை தேர்வு செய்து தத்தெடுக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் தகுதியானவர்களுக்கு பொருளாதார நிதியுதவி வழங்கபடும்.
மாவட்ட வன அலுவலர் சமர்த்தா கூறுகையில், ''வனக்குழுக்கள் தேர்வு செய்து நிதியுதவி வழங்கப்படுகிறது.
இதனால் காடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். மேலும் காப்புக்காடுகள், வனங்கள், வனவிலங்குள், காடுகளின் வளங்கள், பாதுகாப்பு உறுதி செய்யப்படும்,'' என்றார்.

