போலீஸ் தேடுதல் வேட்டையில் வங்கதேசத்தினர் 15 பேர் கைது
போலீஸ் தேடுதல் வேட்டையில் வங்கதேசத்தினர் 15 பேர் கைது
ADDED : ஜன 28, 2025 11:25 PM
திருப்பூர்:திருப்பூர் மாநகரில் முறைகேடாக தங்கியிருந்த, 15 வங்க தேசத்தினரை போலீசார் கைது செய்தனர். இதுவரை, 98 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தினர் ஊடுருவலை தடுக்கும் விதமாக, திருப்பூர் மாநகர், புறநகர் என, மாவட்டம் முழுதும் போலீசார் ஒரு மாதமாக உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
உளவுப்பிரிவு போலீசார் தகவல் வாயிலாக, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தொடர்ந்து, வட மாநிலத்தினர் தங்கியுள்ள பகுதி, பனியன் நிறுவனங்களில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடக்கிறது.
தற்போது, திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காங்கேயம் ரோடு, காஞ்சி நகர் மற்றும் சில இடங்களில், உரிய ஆவணங்கள் இல்லாமல் போலியான ஆதார் கார்டு போன்றவற்றை வைத்து கொண்டு, முறைகேடாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 15 பேரை, நல்லுார் மற்றும் திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 83 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, திருமுருகன்பூண்டி போலீஸ் எல்லையில் தங்கியிருந்த ஐந்து பேர் மற்றும் நல்லுாரில் 10 பேர் என, 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவணங்கள் சரிபார்த்த பின், சிலர் அனுப்பி வைக்கப்பட்டனர். இம்மாதத்தில் மட்டும் மொத்தம், 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

