தமிழகத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக ஆண்டுக்கு 15 லட்சம் பேர் வருகை
தமிழகத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக ஆண்டுக்கு 15 லட்சம் பேர் வருகை
ADDED : அக் 19, 2025 12:35 AM
சென்னை: ''மருத்துவ சிகிச்சை பெற வெளிநாடுகளில் இருந்து, ஆண்டுக்கு 15 லட்சம் பேர் தமிழகம் வருகின்றனர்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சார்பில், 'எதிர்கால மருத்துவம் 2.0' பன்னாட்டு மாநாடு நடந்து வருகிறது.
இந்த மாநாட்டை நேற்று பார்வையிட்ட அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
மூன்று நாட்கள் நடக்கும் மாநாட்டில், 15,000 மாணவர்கள், ஒன்பது நாடுகளை சேர்ந்த, 38 சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.
அவசர சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி கருத்தரங்குகள், விரிவான விவாதங்கள் நடந்து வருகின்றன. அத்துடன் மருத்துவம் சார்ந்த 46 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், ரோபோடிக் பேருந்து, எண்டோஸ்கோப் பேருந்து ஆகியவை மாநாட்டில் இடம்பெற்றுள்ளன. இவற்றின் செயல்பாடுகளை மருத்துவ மாணவர்கள் கேட்டறிந்து வருகின்றனர்.
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைகளில் உள்ள உபகரணங்கள், தமிழக அரசு மருத்துவமனைகளில் இடம் பெற்றுள்ளன. மருத்துவ சிகிச்சைக்கு, இந்தியா வருவோரில், 25 சதவீதம் பேர் தமிழகம் வருகின்றனர். அதாவது, ஆண்டுக்கு, 15 லட்சம் பேர் சிகிச்சைக்கு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.