1.50 லட்சம் விநாயகர் சிலைகள்: ஹிந்து முன்னணி தீவிரம்
1.50 லட்சம் விநாயகர் சிலைகள்: ஹிந்து முன்னணி தீவிரம்
ADDED : ஜூலை 24, 2025 06:47 AM

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியன்று தமிழகம் முழுதும், ஹிந்து முன்னணி சார்பாக, 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன.
விநாயகர் சதுர்த்தி நாளில், வீதிகள் தோறும், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். வரும் ஆக.,27ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஹிந்து முன்னணி சார்பில், தமிழகம் முழுதும், 1.50 லட்சம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டு, சிலை தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இது குறித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:
விநாயகர் சிலைகள் அனைத்தும் சுற்றுசூழல் பாதிக்காத வகையில், பேப்பர் கூழ், கிழங்கு மாவு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. வாட்டர் கலர் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
சிம்ம வாகனம், சிவ பார்வதி, முருக விநாயகர், சித்தி புத்தி விநாயகர், அன்ன வாகனம், விஸ்வரூப விநாயகர் என பல்வேறு வடிவங்களில், 3 அடி முதல், 11 அடி வரையில் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் நடக்கும் விசர்ஜன விழாவில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்; கோவையில் அண்ணாமலை; மேட்டுப்பாளையத்தில் நடிகர் ரஞ்சித்; மதுரையில் மத்திய அமைச்சர் முருகன்; திண்டுக்கல்லில் திரைப்பட இயக்குநர் பேரரசு; கோபியில் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா; உடுமலையில் நடிகை கஸ்துாரி என, பலரும் பங்கேற்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.