கடலோர மறு சீரமைப்புக்கு ரூ.1,675 கோடியில் திட்டம்-
கடலோர மறு சீரமைப்புக்கு ரூ.1,675 கோடியில் திட்டம்-
ADDED : ஜன 11, 2024 10:32 PM

சென்னை:அடுத்த ஐந்து ஆண்டு களில், 1,675 கோடி ரூபா யில் கடலோர மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, தமிழக சுற்றுச் சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
உலக வங்கி உதவியுடன், தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1,675 கோடி ரூபாயில், கடலோர மறு சீரமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, அரசு அறிவித்திருந்தது. அதன்படி பணிகளை துவங்க, அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடல் பகுதியை சார்ந்து வாழும் மீனவர்கள் உள்ளிட்டோருக்கான, நீல பசுமை பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும்.
அரசின் பசுமை காலநிலை நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்களும், இதில் அடங்கும்.
சதுப்பு நிலங்கள், பவளப்பாறைகள், கடற்பகுதிகள், உப்பு சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட, கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாத்தல், மறுசீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்துவதை உறுதி செய்யும், தமிழ்நாடு புளு கார்பன் ஏஜன்சி திட்டமும் செயல்படுத்தப்படும்.
நாகை, சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையங்கள், தஞ்சையில் உள்ள சர்வதேச கடல்பசு பாதுகாப்பு மையம், பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் மற்றும் சென்னையில் உள்ள சதுப்பு நிலங்களை மறுசீரமைத்தல், எண்ணுார் சிற்றோடை மறுசீரமைப்பு ஆகிய ஒன்பது திட்டங்களும், கடலோர மறு சீரமைப்பு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.