ADDED : நவ 28, 2024 02:40 AM
மத்திய அரசு சார்பில், உயர்கல்வி பயிலும், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பிரகதி திட்டத்தில், ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு கீழ், உள்ளோரின் பெண் குழந்தைகளுக்கு, ஆண்டுக்கு 50,000 ரூபாய் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அதேபோல், சக் ஷம் - ஸ்வனாத் திட்டங்களின் வாயிலாக மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக, ஆண்டுக்கு 50,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இன்ஜி., மற்றும் டிப்ளமா மாணவர்களுக்கு, இது ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், 2024 - 25 கல்வியாண்டில், இக்கல்வி உதவித்தொகையை பெற, தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களில், 1,700 மாணவர்களின் விண்ணப்பங்கள், பல்வேறு காரணங்களால் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்ய தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், காலஅவகாசத்தை வரும், 30 வரை நீட்டித்துள்ளது.
தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக கமிஷனர் ஆப்ரஹாம் இதுகுறித்து அனைத்து கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.
-- நமது நிருபர் -