ADDED : மார் 18, 2026 04:48 AM
மதுரை: மதுரை மண்டலத்தில் 175 சி.என்.ஜி., (இயற்கை எரிவாயு) பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ்கள் பயன்பாட்டை அதிகரிக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.
மதுரை மண்டலத்துக்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு 175 சி.என்.ஜி., பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் 125 சிட்டி பஸ்களாகவும், 50 புறநகர் பஸ்களாகவும் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: சோதனை ஓட்டத்தில் சி.என்.ஜி., பஸ்கள் தினமும் 514 கி.மீ., துாரம் வரை இயக்கப்பட்டன. டீசல் பஸ்கள் இயக்க, ஒரு நாளைக்கு 98.47 லிட்டர் டீசல் தேவைப்படும். இதில் ரூ.8882 செலவாகுமெனில் சி.என்.ஜி., பஸ்கள் இயக்க ரூ.7381 மட்டுமே செலவாகிறது. இதனால் நாளொன்றுக்கு ஒரு கி.மீ., க்கு ரூ.2.92 என ரூ.1500 வரை சேமிக்க முடியும்.
போக்குவரத்து கழக எரிபொருள் செலவு மிச்சமாவதுடன் சுற்றுசூழலும் பாதுகாக்கப் படுகிறது. மதுரை மண்டலத்தில் படிப்படியாக சி.என்.ஜி., பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றனர்.
