22 நாட்களுக்கு தேவையான 18 லட்சம் டன் நிலக்கரி இருப்பு
22 நாட்களுக்கு தேவையான 18 லட்சம் டன் நிலக்கரி இருப்பு
ADDED : நவ 09, 2024 10:25 PM
சென்னை:திருவள்ளூர், துாத்துக்குடி, சேலம் மாவட்டங்களில் மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன.
திருவள்ளூரில் புதிதாக துவங்கப்பட்ட, 800 மெகா வாட் திறன் உடைய, 'வடசென்னை - 3' அனல் மின் நிலையத்தில், இன்னும் வணிக ரீதியாக மின் உற்பத்தி துவக்கப்படவில்லை.
எனவே, மற்ற ஐந்து அனல் மின் நிலையங்களிலும் தினமும் முழு மின் உற்பத்திக்கு, 72,000 டன் நிலக்கரி தேவை. இது, ஒடிசா மாநிலத்தில் உள்ள, 'தால்சர், ஐ.பி.வேலி' போன்ற சுரங்கங்களில் இருந்து தினமும் பெறப்படுகிறது.
தினசரி மின் தேவையை பூர்த்தி செய்வதில், அனல் மின்சாரத்தின் பங்கு அதிகம். அதற்கு ஏற்ப, நிலக்கரி பயன்பாடும் இருக்கும்.
எனவே, மின் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க, மின் நிலைய வளாகங்களில், ஏழு நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு வைப்பது வழக்கம்.
கடந்த மாத இறுதியில் இருந்து, பல மாவட்டங்களில் மழை பெய்வதால், மின்தேவை குறைந்துள்ளது. இதனால், அனல் மின் உற்பத்தியும், 2,500 மெகா வாட்டாக குறைக்கப்பட்டு உள்ளது.
தற்போதையை நிலவரப்படி, மின் வாரியத்தின் நிலக்கரி இருப்பு, 17.80 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
இதை, 22 நாட்களுக்கு மின் உற்பத்திக்கு பயன்படுத்தலாம். இது தவிர, சுரங்கங்களில் இருந்து தினமும், 60,000 டன் நிலக்கரி, தமிழகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
எனவே, கையிருப்பில் அதிக நிலக்கரி உள்ளதால், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய அவசியம் ஏற்படாது என, வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.