சிங்கம்புணரியில் 180 ஏக்கர் கண்மாய் மதகில் உடைப்பு
சிங்கம்புணரியில் 180 ஏக்கர் கண்மாய் மதகில் உடைப்பு
ADDED : டிச 09, 2024 11:25 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 180 ஏக்கர் பரப்பு கொண்ட புதுக்கண்மாய் முழு கொள்ளளவை எட்டி, மறுகால் பாய்ந்தது. ஆனால் சில மணி நேரத்திலேயே கண்மாயிலிருந்து புது வயலுக்கு தண்ணீர் திறக்கப்படும் பெரிய மதகு அருகே உடைப்பு ஏற்பட்டது. உடைப்பை சரிசெய்ய அப்பகுதி விவசாயிகள் கடுமையாக போராடி வருகின்றனர்.
அதிகாரிகள் அப்பகுதியை எட்டிக் கூட பார்க்கவில்லை. பல மணி நேரத்திற்கு பிறகே ரோட்டில் நின்று கண்மாயை பார்த்துவிட்டு சிறிய நீர்க்கசிவு தான் என்று கூறி சென்று விட்டனர். மதகை ஒட்டிய இடத்தில் உடைப்பு ஏற்பட்டதால் விவசாயிகளால் சரி செய்ய முடியவில்லை. பாதியளவு கண்மாய் தண்ணீர் வீணாகி அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற் பயிர்கள் மூழ்கி விட்டது.
வயல்களில் வளர்க்கப்பட்ட ஏராளமான கோழிகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் விவசாயிகள் கடும் அவதியில் உள்ளனர். இப்பகுதி கண்மாய்களின் மதகு, கரைகள் முறையாக சரி செய்யப்படாமல், அதிகாரிகளின் அலட்சியத்தால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.