ADDED : ஜன 03, 2025 02:55 AM
சென்னை:தமிழக அணைகளில், 198 டி.எம்.சி., நீர் கையிருப்பில் உள்ளதால், ஏப்ரல் மாதம் வரை பாசனத்திற்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை.
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டு மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி.,யாகும். இதில், மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட, 18 அணைகள் அதிக கொள்ளளவு உடையவை.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கிய, வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ளது. எனினும், பருவம் தவறிய மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. பருவமழை கை கொடுத்ததால், 90 அணைகளின் நீர் கையிருப்பு, 198 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சேலம் மேட்டூர் அணையில், அதன் முழு கொள்ளளவான 93.4 டி.எம்.சி., அளவிற்கு நீர் நிரம்பி உள்ளது. ஈரோடு பவானிசாகரில் 26.8, கோவை பரம்பிக்குளத்தில் 12.4, திருவண்ணாமலை சாத்தனுார் அணையில், 7.15 டி.எம்.சி., அளவிற்கு நீர் இருப்பு உள்ளது.
அணைகளில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதால், ஏப்ரல் மாதம் வரை பாசனத்திற்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

