2 நாள் சட்டசபை கூட்டம்; பழுது சரி பார்க்க ரூ.3 கோடி செலவு
2 நாள் சட்டசபை கூட்டம்; பழுது சரி பார்க்க ரூ.3 கோடி செலவு
ADDED : டிச 07, 2024 07:35 AM

சென்னை: தமிழக சட்டசபை 2 நாள் நடப்பதை முன்னிட்டு, 3 கோடி ரூபாய் செலவில் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
தி.மு.க., அரசு, 2021ல் பொறுப்பேற்ற பின், கொரோனா பரவல் காரணமாக, சென்னை கலைவாணர் அரங்கில் தற்காலிக சட்டசபை கூட்டம் நடந்து வந்தது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்ததும், மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு சட்டசபை மாற்றப்பட்டது. அங்கு, 5 கோடி ரூபாய் செலவில் இருக்கைகள், மின் சாதனங்கள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டன.
காகிதமில்லா சட்டசபையை நடத்தும் வகையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் மேஜையில் தொடுதிரை சிறு கணினிகள் பொருத்தப்பட்டன.
ஆங்காங்கே எல்.இ.டி., திரைகள் வைக்கப்பட்டு, சட்டசபை நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படுகின்றன. தற்போது, இருநாள் மட்டுமே நடக்கவுள்ள சட்டசபை கூட்டத்திற்காக, மேஜைகள், கதவுகளுக்கு வார்னிஷ் பூசுதல், மைக், தொடுதிரை சிறு கணினிகள், மின் விளக்குகள், ஸ்பீக்கர் போன்றவற்றை பழுதுபார்த்தல், சுவர்களுக்கு வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இது மட்டுமின்றி, ஆண் மற்றும் பெண் எம்.எல்.ஏ.,க்களின் ஓய்வறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றப்படுகின்றன. இப்பணிகளுக்கு, 3 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.

