ADDED : நவ 13, 2024 04:16 AM

சென்னை; 'கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, டிசம்பர் 31 மற்றும் ஜன., 1ல் வெள்ளி விழா நடத்தப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
குமரிக் கடல் நடுவே, 2000ம் ஆண்டு துவக்கத்தில், 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டது.
அந்த சிலை அமைக்கப்பட்டு, கால் நுாற்றாண்டு ஆகிறது. அதை கொண்டாடும் வகையில், டிசம்பர் 31ம் தேதியும், 2025 ஜன., 1ம் தேதியும் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடத்த, அரசு முடிவு செய்துள்ளது.
இதையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள், கல்லுாரி மாணவர்களுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், 'ஷார்ட்ஸ், ரீல்ஸ்' வாயிலாக, திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவிய போட்டிகள் நடத்தப்படும்.
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தமிழ் இணைய கழக மையங்கள் வாயிலாக, திருக்குறளின் பெருமைகள் குறித்து, போட்டிகள் நடத்தப்படும். அனைத்து மாவட்ட நுாலகங்களிலும், திருவள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்படும்.
திருக்குறள் விளக்க உரைகள் மற்றும் திருக்குறள் தொடர்பாக புகைப்படங்கள், பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். டிசம்பர் 25 முதல் 30 வரை, மாவட்ட அளவில் திருக்குறள் தொடர்பான கருத்தரங்கம், பேச்சரங்கம் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.