கோவையில் 2 நாள் உலக புத்தொழில் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
கோவையில் 2 நாள் உலக புத்தொழில் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
ADDED : அக் 09, 2025 12:27 AM

கோவை: கோவை, கொடிசியா வளாகத்தில், 'தமிழ்நாடு உலக புத்தொழில் மாநாடு 2025' இன்று துவங்குகிறது; முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 9.30 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். 9.45 மணிக்கு கொடிசியாவில் நடக்கும் உலக புத்தொழில் மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார்.
11 மணிக்கு, நெடுஞ்சாலைத்துறை சார்பில், அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் வரையிலான 10.1 கி.மீ., நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை, கோல்டுவின்ஸ் பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கிறார்.
பாலத்தில் பயணம் செய்யும் அவர், 11.15 மணிக்கு கோவை அரசு கலை கல்லுாரியில் நடக்கும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் விபத்தில்லா கோவைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில், தங்க நகை பூங்காவுக்கான அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து மதியம், 2:30 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தலைமையில், ஆறு துணை கமிஷனர்கள், 26 உதவி கமிஷனர்கள், 62 இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பாதுகாப்பு பணிகளுக்காக ஐந்து மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். முதல்வர் வருகையை முன்னிட்டு அவிநாசி ரோட்டில் வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மாநகரின் அனைத்து சோதனை சாவடிகளிலும், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.