இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு; குடை, ரெயின் கோட்... ஏதாவது ஒண்ணு கட்டாயம் வேணும்
இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு; குடை, ரெயின் கோட்... ஏதாவது ஒண்ணு கட்டாயம் வேணும்
ADDED : ஆக 16, 2024 01:36 PM

சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு வாரம் முன்பு பரவலாக கனமழை கொட்டியது. தொடர் மழையால் ஆறுகள், ஏரிகளில் நீர் நிரம்பி வழிந்தோடியது. விடாது பெய்த மழையால் தஞ்சை, நாகை என பல மாவட்டங்களில் விளைநிலங்கள் நீரில் மூழ்கின.
இந்நிலையில் இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;
நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் இன்றும், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 115.6 மி.மீ., முதல் 204.4 மி.மீ., வரை மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் வரும் 18ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.