'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி ஆசாமிகள் 2 பேர் பிடிபட்டனர்
'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி ஆசாமிகள் 2 பேர் பிடிபட்டனர்
ADDED : ஜன 28, 2025 05:58 AM

சென்னை : சென்னையைச் சேர்ந்த முதியவரை, 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்து, 33 லட்சம் ரூபாய் மோசடி செய்த இரண்டு பேரை, டில்லி மற்றும் கோல்கட்டாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சமீபத்தில், சைபர் குற்றவாளிகள், 'ஆன்லைன்' வாயிலாக முதியவரை, 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்து, 33 லட்சம் ரூபாயை மோசடி செய்தனர். விசாரணையில், இந்த தொகையை 'கிரிப்டோ கரன்சி'களாக மாற்றி, வெளிநாடுகளுக்கு அனுப்பியது தெரியவந்தது.
இதுதொடர்பாக, சென்னை மண்டல அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த மோசடி தொடர்பாக, மேற்கு வங்கம், ம.பி., மற்றும் உ.பி., குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
அதன் வாயிலாக, சைபர் குற்றவாளிகள், டிஜிட்டல் அரெஸ்ட் செய்து மோசடி செய்யும் தொகையை, வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு கிரிப்டோ கரன்சிகளாக மாற்றி முதலீடு செய்வது தெரியவந்தது.
இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட இரண்டு பேர், வெளிநாடுகளுக்கு தப்பிக்க முயற்சி செய்து வருவதும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அந்த இரண்டு பேரை, டில்லி மற்றும் கோல்கட்டாவில் நேற்று கைது செய்தனர்; அவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை வெளியிட மறுத்து விட்டனர்.