இரிடியம் முதலீடு மோசடியில் ஈடுபட்ட முக்கிய புள்ளிக்கு 2 சொகுசு பங்களா
இரிடியம் முதலீடு மோசடியில் ஈடுபட்ட முக்கிய புள்ளிக்கு 2 சொகுசு பங்களா
ADDED : அக் 27, 2025 12:50 AM
சென்னை: இரிடியம் முதலீடு மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட சாமிநாதன், மதுரையில் நீச்சல் குளத்துடன் இரண்டு சொகுசு பங்களாக்கள் கட்டி இருப்பது, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரிசர்வ் வங்கியில் பதிவு செய்து, அறக்கட்டளை துவங்கி இருப்பது போல பொதுமக்களை நம்ப வைத்து, இரிடியத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 1 கோடி ரூபாய் தரப்படும் என, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்து உள்ளது.
இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்மோசடி தொடர்பாக, 80க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி, 62 பேரை கைது செய்துள்ளனர். தஞ்சாவூர், பெரம்பலுார், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் சோதனை தொடர்கிறது.
இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
இரிடியம் முதலீடு மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சாமிநாதன், மதுரையில் நீச்சல் குளத்துடன் இரண்டு சொகுசு பங்களாக்கள் கட்டி உள்ளார்; சென்னையிலும் வீடு வாங்கி உள்ளார்.
இவர் தலைமையில், மாநிலம் முழுதும் மோசடி நடந்துள்ளது. இவரின் வலது கரமாக, புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் செயல்பட்டுள்ளார்.
இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன், பணம் இரட்டிப்பு மோசடி தொடர்பாக கைதாகி ஜாமினில் வெளியே வந்த பின்னரும், இரிடியம் முதலீடு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வேலுார் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த ஜெயகரன், ராணிப்பேட்டை மாவட்டம் மூர்த்தி ஆகியோரும் மிகப்பெரிய அளவில் இரிடியம் முதலீடு மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.
இவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும், சாமிநாதன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள், மோசடி தொகையில் பல கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கி உள்ள தகவலும் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக, தஞ்சாவூர், பெரம்பலுார், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும், அவர்களின் கூட்டாளிகளின் வீடுகளில் சோதனை தொடர்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

