UPDATED : அக் 20, 2026 08:47 PM
ADDED : அக் 20, 2026 08:44 PM
-–நமது நிருபர்–: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 7.86 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, புதிய டிக்கெட் கவுன்டர்கள், ‘ஏசி’ வசதியுடன் கூடிய பயணியர் காத்திருப்பு அறை, கழிப்பிட வசதி, ஓய்வு அறைகள், குடிநீர் வசதி, மேற்கூரைகள் சீரமைப்பு, பார்சல் அலுவலகம் ஆகிய வசதியுடன் மேம்பாட்டு பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் மட்டும் இன்றி, பல மாநிலங்களில் இருந்து, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, பக்தர்கள் வருவது அதிகரித்துள்ளது. பயணியர் தேவைக்கு ஏற்ப, கூடுதல் ரயில்களை இயக்க, வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது, நான்கு பாதைகளும், மூன்று நடைமேடைகளும் உள்ளநிலையில், கூடுதல் ரயில்கள் இயக்க வசதியாக, 31.49 கோடி செலவில், இரண்டு நடைமேடைகள் அமைக்க, ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி வந்தவுடன், இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
