மதுரையில் குடும்பத்துடன் விஷம் அருந்தி 2 பேர் தற்கொலை; வறுமையால் விபரீத முடிவு
மதுரையில் குடும்பத்துடன் விஷம் அருந்தி 2 பேர் தற்கொலை; வறுமையால் விபரீத முடிவு
ADDED : ஏப் 18, 2025 06:45 AM

மதுரை: வறுமையின் காரணமாக குடும்பத்துடன் விஷம் அருந்திய 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை அனுப்பானடி தாயுமான தெருவில் வசித்து வந்தவர் ஜீவகுமாரி. கணவரை இழந்த இவர் கூலி வேலைக்கு சென்று தனது குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்த சூழலில், இதய நோயால் பாதிக்கப்பட்ட ஜீவகுமாரி மேற்கொண்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், போதிய வருமானம் இல்லாமல், இவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது.
இந்த நிலையில், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ஜீவகுமாரி, தனது மகள் இன்பலட்சுமி மற்றும் மகன் சிங்கபெருமாளுடன் விஷம் குடித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க முயன்றனர். ஆனால், ஜீவகுமாரி, இன்பலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தனர். சிங்கபெருமாள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் வறுமையின் காரணமாக குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்று 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

