ADDED : மார் 12, 2024 02:34 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே கிணற்றுக்குள் விழுந்த பைக்கை எடுக்க சென்ற இரண்டு பேர் விஷ வாயு தாக்கி பலியாயினர்.
மயிலாடி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீ லிங்கம் 55. செங்கல் சூளை தொழிலாளி. இவரது மகன் செல்வா 19, தனது பைக்கை வீட்டையொட்டிய சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றின் அருகே நிறுத்தி இருந்தார். திடீரென பைக் தவறி கிணற்றுக்குள் விழுந்தது.
காலையில் எடுத்துக் கொள்ளலாம் என்று குடும்பத்தினர் கூறியும் கேட்காமல் நள்ளிரவில் உறவினர் செல்வனுடன் 35, ஸ்ரீலிங்கம் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினார். சிறிது நேரத்தில் இருவரும் மூச்சுத்திணறி இறந்தனர்.
தீயணைப்புத் துறையினர் இருவரது உடலையும் மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்த பைக்கில் இருந்து பெட்ரோல் கசிந்து அதிலிருந்து உருவான விஷவாயு தாக்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கன்னியாகுமரி போலீசார் விசாரிக்கின்றனர்.

