வக்ப் சொத்துகளை நில அளவை செய்ய 20 சர்வேயர் நியமனம்: அமைச்சர் நாசர்
வக்ப் சொத்துகளை நில அளவை செய்ய 20 சர்வேயர் நியமனம்: அமைச்சர் நாசர்
ADDED : ஏப் 30, 2025 06:15 AM
சென்னை : ''தமிழகம் முழுதும் உள்ள வக்ப் சொத்துக்களின் நில அளவைப் பணிகளை விரைவுபடுத்த, கூடுதலாக, 20 நில அளவையர்கள் நியமிக்கப்படுவர்,'' என, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை, திருநெல்வேலி, கரூர், சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில், கூடுதலாக தலா ஒரு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், நெல்லை, விழுப்புரம், தஞ்சை மாவட்டங்களில், கூடுதலாக ஒரு கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் துவங்கப்படும்
கிறிஸ்துவர்களின் கல்லறை தோட்டம், கபர்ஸ்தான்களை சீரமைக்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
சிறுபான்மை மாணவ - மாணவியர் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு படிக்க, கல்வி உதவித்தொகை வழங்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
புத்த, சமண, சீக்கிய மதத்தினர், அவரவர் புனித தலங்களுக்கு பயணம் செய்ய, ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு, 10,000 ரூபாய் வீதம், 120 பேருக்கு, 12 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்
தமிழகம் முழுதும் உள்ள வக்ப் சொத்துக்களின் நில அளவை பணிகளை விரைவுபடுத்த, கூடுதலாக, 20 உரிமம் பெற்ற நில அளவையர்கள் நியமனம் செய்யப்படுவர். இதற்காக, 2.28 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
பள்ளிவாசல், தர்காக்களை சீரமைக்க வழங்கப்படும் மானியம், 10 கோடி ரூபாயிலிருந்து, 15 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் அறிவித்தார்.

