ADDED : ஜூலை 31, 2025 01:40 AM

சென்னை: ''கடந்த 1967 மற்றும் 1977ம் ஆண்டு நடந்த தேர்தல்களில், அதிகார பலம் கொண்ட கட்சிகளை எதிர்த்து, புதிதாக வந்தவர்கள் வெற்றி பெற்றது போல, 2026ம் ஆண்டு தேர்தலிலும் நடக்கும்,'' என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் ௨ கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கென உறுப்பினர் சேர்க்கைக்கு, மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் செயலியை அறிமுகம் செய்து வைத்து, ஐந்து குடும்பங்களை உறுப்பினர்களாக இணைத்து வைத்த பின், அக்கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது:
இதற்கு முன், தமிழக அரசியலில் இரண்டு மிகப்பெரிய தேர்தல்கள், 1967 மற்றும் 1977ம் ஆண்டுகளில் நடந்தன. அதை போலவே, 2026 தேர்தல் அமையப்போகிறது. அதிகார பலம், அசுர பலம் கொண்ட கட்சிகளை எதிர்த்து, அந்த தேர்தல்களில் புதிதாக வந்தவர்கள் வெற்றி பெற்றனர். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என எல்லா மக்களையும் அவர்கள் சந்தித்ததால் வெற்றி பெற்றனர்.
'மக்களிடம் செல்; மக்களிடம் இருந்து கற்றுக்கொள்; மக்களுடன் வாழ்; மக்களுடன் சேர்ந்து திட்டமிடு' என அண்ணாதுரை கூறியுள்ளார். இதை சரியாகச் செய்தால், நம்மால் வெற்றி பெற முடியும். அடுத்து மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு பயணம் நடக்கவுள்ளது. தொடர்ந்து, மக்களுடன் மக்களாக இருக்கப் போகிறோம்.
இப்போதிருந்தே அதற்கான வேலையை துவங்க வேண்டும். நாம் இருக்கிறோம்; நம்முடன் மக்கள் இருக்கின்றனர்; இதற்கு மேல் என்ன வேண்டும்?
இவ்வாறு விஜய் பேசினார்.
த.வெ.க., உறுப்பினர் சேர்க்கைக்கான மொபைல் போன் செயலியை அறிமுகப்படுத்திய விஜய்.

