ADDED : ஜன 13, 2024 06:22 AM

சென்னை: உணவு டெலிவரிக்கு பயன்படுத்தும் செயலிகளில் மர்ம நபர்கள் ஊடுருவதாக கூறி, 22 பேரிடம் சைபர் கிரைம் குற்றவாளிகள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு வாரத்தில் இந்த மோசடிகள் நடந்துள்ளன.
இதுகுறித்து, தமிழக சைபர் கிரைம் கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய்குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வீடு மற்றும் அலுவலகம் என, இருப்பிடங்களுக்கு வந்து உணவு டெலிவரி செய்ய, சில செயலிகளில், 'ஆர்டர்' செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இது தவிர்க்க முடியாத நிலைக்கும் சென்று விட்டது.
இதை சைபர் கிரைம் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த துவங்கி விட்டனர். அவர்கள் தற்போது புதுவிதமான மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சைபர் கிரைம் குற்றவாளிகள், பொது மக்களின் மொபைல் போன் எண்களுக்கு அழைக்கின்றனர் அல்லது ஐ.வி.ஆர். எனும் குரல் பதிவு வாயிலாக தொடர்பு கொள்கின்றனர்.
நீங்கள் உணவு டெலிவரிக்கு பயன்படுத்தும், செயலியின் நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம். உங்கள் செயலியில் மர்ம நபர்கள் ஊடுருவி இருப்பது எங்களுக்கு தெரிய வந்துள்ளது.
அவர்கள் பண பரிவர்த்தனைக்கு நீங்கள் செயலியில் வைத்திருக்கும், 'வாலட்' தொகை எடுக்க முயற்சி செய்துள்ளனர் என, தெரிவிக்கின்றனர்.
நீங்கள் பதற்றம் அடைய வேண்டாம். பண மோசடிக்கு முயன்ற மர்ம நபர்களின் செயலை முறியடித்துள்ளோம். அவர்கள் மீண்டும் ஊடுருவாமல் இருக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். அதற்காக நாங்கள் உங்கள் மொபைல் போன் எண்ணிற்கு, 'ஒன்' என்ற அனுப்புவோம்.
அதை நீங்கள் மீண்டும்எங்களுக்கு அனுப்புங்கள். உடனடியாக ஒ.டி.பி. எண் வரும் அதையும் எங்களுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு சிரமம் என்றால் நாங்கள் தொடர்பு கொள்கிறோம் என்று கூறுகின்றனர்.
பதற்றத்தில் ஒ.டி.பி. எண்ணை தெரிவித்தால், உங்கள் மொபைல் போனையும், சைபர் கிரைம் குற்றவாளிகள் அவர்களின் மொபைல் போனையும் இணைத்து விடுகின்றனர்.
அப்போது, வாலட் தொகை மற்றும் செயலியில் நீங்கள் வங்கி கணக்கை இணைத்து இருந்தால் அதில் உள்ள தொகையையும் மோசடி செய்து விடுகின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தில், ஜன. 1 - 8 வரை, 22 பேரிடம் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஒ.டி.பி.எண்களை தெரிவிக்க வேண்டாம்.
மோசடி நபர்கள் குறித்து, 1930 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கும், www.cybercrime.gov.in எனும் இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.