தி.மு.க., ஆட்சியில் 22 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது: பழனிசாமி
தி.மு.க., ஆட்சியில் 22 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது: பழனிசாமி
ADDED : ஆக 09, 2025 02:12 AM
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயில் சந்திப்பில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பேசிய தாவது:
அருப்புக்கோட்டை பகுதியில் விவசாயம், நெசவு அதிகமாக செய்யப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் நெசவாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், பசுமை வீடு வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த ஜவுளி உற்பத்தி கொள்கை கொண்டுவரப்பட்டது.
நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கூலி தொழிலாளர்களுக்கு உடன் கூலி வழங்கப்பட்டது. அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அ.தி.மு.க., அரசு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வந்தது. அ.தி.மு.க., ஏழைகளுக்கான கட்சி. விருதுநகர் மாவட்டத்தில் 68 மினி கிளினிக் கொண்டுவரப்பட்டது. தி.மு.க., அதை மூடிவிட்டது. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சியில் 4 ஆயிரம் மினி கிளினிக் கொண்டு வரப்படும்.
ஏழை பெண்களுக்கு திருமண உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். தி.மு.க., ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மீண்டும் கொண்டு வரப்படும். பொங்கலுக்கு தரமான வேஷ்டி, சேலை வழங்கப்படும். தீபாவளிக்கு பெண்களுக்கு அற்புதமான சேவை தரப்படும்.
4 ஆண்டுகளில் இந்த அரசு 22 ஆயிரம் கோடி முறைகேடு செய்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் சமூக நல விடுதியில் தரம் அற்ற உணவு வழங்கப்பட்டு வருகிறது. பாயாசம் போல் கிச்சடி வழங்கப்படுகிறது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது துாய்மை பணியாளர்களை சந்தித்து வழங்கிய வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் அதிக வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது.
இன்றைய ஆட்சியில் அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். உயிருடன் அரசு மருத்துவமனைக்கு சென்றால் உயிர் இல்லாமல் தான் திரும்ப முடியும்.
அருப்புக்கோட்டையில் அரசு கல்லுாரி, வட்டார போக்குவரத்து அலுவலகம், கூட்டுக் குடிநீர் திட்டம் அ.தி.மு.க., வால்கொண்டுவரப்பட்டது.