ADDED : மார் 18, 2024 01:44 AM

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையினர் பாதுகாப்பு வேலியில் பொரிக்கப்பட்ட 2228 ஆமை குஞ்சுகளை தனுஷ்கோடி கடலில் விட்டனர்.
ஜன., முதல் ஏப்., வரை ஆமைகள் இனப்பெருக்கத்திற்கு தனுஷ்கோடி கடற்கரையில் குழிதோண்டி முட்டையிட்டு செல்லும். இதனை வனத்துறையினர் சேகரித்து தனுஷ்கோடி கடற்கரையில் உள்ள பாதுகாப்பு வேலியில் குழிதோண்டி முட்டைகளை புதைத்து வைத்தனர்.
இந்த முட்டைகள் 55 முதல் 60 நாட்களுக்கு பின் பொரிந்து ஆமை குஞ்சுகள் வெளியேறும். இதனை வனத்துறையினர் சேகரித்து கடலில் விடுவர்.
அதன்படி நேற்று பொரிந்த 85 ஆமைக் குஞ்சுகளை வனரேஞ்சர் மகேந்திரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சேகரித்து தனுஷ்கோடி கடலில் விட்டனர்.
வனத்துறையினர், 'இதுவரை 16,681 முட்டைகள் சேகரிக்கப்பட்டன. இதில் 2228 ஆமைக் குஞ்சுகள் பொரிந்து கடலில் விடப்பட்டன. நேற்று ஒரு ஆமை முட்டையிட்டு சென்ற 105 முட்டைகளை சேகரித்து பாதுகாப்பு வேலியில் புதைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

