பொறியியல் படிப்புகளுக்கு 2.49 லட்சம் பேர் விண்ணப்பம்
பொறியியல் படிப்புகளுக்கு 2.49 லட்சம் பேர் விண்ணப்பம்
ADDED : ஜூன் 07, 2025 11:16 PM
சென்னை:அண்ணா பல்கலையில், பொறியியல் படிப்புக்கு 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலையின் கீழ், 463 பொறியியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. 2025 - 26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மே 7ம் தேதி துவங்கியது; நேற்று முன்தினம் இரவு 12:00 மணியுடன் நிறைவடைந்தது.
இதில், 3 லட்சத்து 2,374 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 2 லட்சத்து 49,883 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர்; 2 லட்சத்து 26,359 மாணவர்கள் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்து உள்ளனர்.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்திய மாணவர்கள், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய நாளை கடைசி நாள். அதை தொடர்ந்து, வரும் 11ம் தேதி சம வாய்ப்பு எண்கள் வெளியிடப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பு, 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்க உள்ளது. தரவரிசை பட்டியல், 26ம் தேதி வெளியிடப்படும். தரவரிசை பட்டியல் தொடர்பாக மாணவர்கள், 28ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை முறையிடலாம்.
வழக்கம் போல, இந்தாண்டிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தரவு அறிவியல், கணினி அறிவியல் படிப்பு போன்றவற்றுக்கு, மாணவர்கள் முன்னுரிமை அளித்துள்ளனர். ஒருசில மாணவர்கள் இரண்டுக்கு மேற்பட்ட பாடங்களை தேர்வு செய்துள்ளனர்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், எந்தெந்த பாடங்களுக்கு எவ்வளவு முன்னுரிமை அளித்துள்ளனர் என்பது தெரிய வரும் என, அண்ணா பல்கலை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.