ADDED : ஜன 01, 2025 10:51 PM
சென்னை:தமிழகம் முழுதும் போதைப் பொருள் மற்றும் மன நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க, 25 போதை மறுவாழ்வு மையங்கள் விரைவில் துவக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் ஏராளமான தனியார் போதை மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வந்தாலும், டாஸ்மாக் நிதியுதவியுடன் அரசு சார்பில், கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையம் உட்பட ஏழு மையங்கள் மட்டுமே உள்ளன.
அவற்றில், கீழ்ப்பாக்கம் காப்பகத்திற்கு தான், பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளியோர் அதிகம் வருகின்றனர். வளர் பருவத்திலேயே, போதைப் பழக்கத்திற்கு ஆண், பெண் என இருபாலரும் அதிகம் பாதிக்கப்படுவதால், அவர்களை மீட்டெடுக்க, அனைத்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும், அதற்கான பிரத்யேக மையங்கள் அமைக்க அரசு திட்டமிட்டது.
அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 25 மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.  ஒவ்வொரு மருத்துவமனையிலும், தலா 20 படுக்கைகள் தயார் செய்யப்படுகின்றன. இந்த மையங்களில் பணி அமர்த்தப்படுவோருக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு மையத்திலும் மனநல ஆலோசகர், உளவியலாளர், மனநல சமூக சேவகர், செவிலியர், மருத்துவமனை பணியாளர், சுகாதாரப் பணியாளர் மற்றும் காவலர் நியமிக்கப்படுவர்.
இந்த மையங்கள் செயல்பாட்டு வந்த பின், போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உளவியல் சிகிச்சை அளிக்கப்படும். இந்த மையங்கள் ஓரிரு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

