அரும்பாக்கத்தில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை.
அரும்பாக்கத்தில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை.
ADDED : டிச 11, 2024 03:53 PM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மர்ம நபர்கள் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அரும்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை மகன் கார்த்திகேயன், 45. வெளிநாட்டில் டிரைவராக பணியாற்றி வந்தார். வீட்டில் அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் வசித்து வந்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய கார்த்திகேயன் மயிலாடுதுறை கழுகாணிமுட்டம் கிராமத்தில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். புதிய வீட்டின் பால் காய்ச்சும் நிகழ்ச்சிக்காக அரும்பாக்கத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு கடந்த சில நாட்களாக புதிய வீட்டில் கார்த்திகேயன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை உறவினர் விக்னேஷ் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த கார்த்திகேயன் தனது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோல் கதவு உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 25 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கார்த்திகேயன் பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இது சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது