நடப்பாண்டில் 2.53 லட்சம் கடலாமை முட்டை சேகரிப்பு: வனத்துறையினர் தகவல்
நடப்பாண்டில் 2.53 லட்சம் கடலாமை முட்டை சேகரிப்பு: வனத்துறையினர் தகவல்
ADDED : மார் 18, 2025 04:42 AM
சென்னை : சென்னை உள்ளிட்ட பகுதிகளில், அதிக எண்ணிக்கையில் கடலாமைகள் இறந்து கரை ஒதுங்கிய நிலையில், தற்போது வரை, 2.53 லட்சம் கடலாமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில், கடலாமைகள் கரைக்கு வந்து முட்டையிடுவது வழக்கம். இந்த குறிப்பிட்ட காலத்தில், கடலோர பகுதிகளில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், முன்னர் எப்போதும் இல்லாத வகையில், நடப்பு ஆண்டில் அதிக எண்ணிக்கையில் கடலாமைகள் இறந்து கரை ஒதுங்கின.
இதையடுத்து கடலோர பகுதிகளில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது,
இதன்பின் கடலாமைகள் இறந்து கரை ஒதுங்குவது குறைந்து, கடலாமை முட்டைகள் கிடைப்பது அதிகரித்தது. கடந்த ஜனவரி முதல் தற்போது வரை, தமிழக கடலோர பகுதிகளில் 55 இடங்களில், 2.53 லட்சம் கடலாமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
அதிகபட்சமாக கடலுாரில், 87,871; நாகப்பட்டினத்தில், 73,385; சென்னையில், 43,900 கடலாமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.