26 பேரிடர் மீட்பு குழு; 219 படகுகள் தயார் 300 மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேக்கம்
26 பேரிடர் மீட்பு குழு; 219 படகுகள் தயார் 300 மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேக்கம்
ADDED : அக் 15, 2024 09:12 PM
சென்னை:''கனமழையை எதிர்கொள்ளும் வகையில், 26 பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் 219 படகுகள் தயார் நிலையில் இருப்பதுடன், 300க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது,'' என, துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
உடனடி தீர்வு
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், துணை முதல்வர் உதயநிதி, நேற்று ஆய்வு செய்தார்.
பின், துணை முதல்வர் உதயநிதி அளித்த பேட்டி:
மாநகராட்சி சார்பில், 300 இடங்களில் நிவாரண மையங்கள், 50 முதல் 1,000 நபர்கள் வரை தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாமில், தண்ணீர், பால் பாக்கெட், பிஸ்கெட், ரொட்டி, உணவு ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
மேலும், 35 பொது சமையலறைகள் உள்ளன. சென்னையில் உள்ள, 22 சுரங்கப்பாதையில், கணேசபுரம், பெரம்பூர் ஆகிய இரண்டு சுரங்கப்பாதைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன.
மேலும், 300க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு மணி நேரம் மழை விட்டால், நீர் அகற்றப்பட்டு விடும்.
கடந்த 24 மணி நேரத்தில், எங்கும் மின் தடை ஏற்படவில்லை. 12 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு, 1,500 அழைப்புகள் பெறப்பட்டு, 600 அழைப்புகளுக்கு, உடனடி தீர்வு காணப்பட்டுள்ளன.
65,000 தன்னார்வலர்கள்
சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், 26 இடங்களில் பணியாற்ற உள்ளனர். இதுவரை, 24 குழுக்கள், சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு சென்றடைந்துள்ளன.
மீட்பு பணியில் ஈடுபட சென்னையில், 89 படகுகளும், பிற மாவட்டங்களில், 130 படகுகளும் தயார் நிலையில் உள்ளன.
சென்னையில் 300; சுற்றியுள்ள மாவட்டங்களில் 631 நிவாரண மையங்கள் என, 931 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
சென்னையில் 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்பட, அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு பணியில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சென்னையில் 13,000 பேர் உட்பட, மாநிலம் முழுதும் 65,000 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.