போலீஸ் சோதனையில் சிக்கிய பழைய குற்றவாளிகள் 26 பேர்
போலீஸ் சோதனையில் சிக்கிய பழைய குற்றவாளிகள் 26 பேர்
ADDED : பிப் 28, 2026 05:42 AM

சென்னை: மாநிலம் முழுதும் வாகன சோதனையில் பிடிபட்ட, 766 பேரை விசாரித்ததில், 26 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் தங்கி, பயங்கர சதி திட்டத்துடன் செயல்பட்டு வந்த, வங்கதேச நாட்டைச் சேர்ந்த ஆறு பேரை, சில தினங்களுக்கு முன், டில்லி போலீசார் கைது செய்தனர்.
தமிழகம், கேரளம், தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்கள், பயங்கராவதிகளின் கூடாரமாக மாறி வருவதாக, ஐ.பி., உள்ளிட்ட மத்திய உளவு அமைப்புகள் பல முறை, எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்து, தமிழக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, குற்ற வழக்குகளில் சிக்கி, தலைமறைவாக உள்ள நபர்களை கைது செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மாநிலம் முழுதும், இரு தினங்களாக போலீசார் தீவிர வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது, 766 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில், 26 பேர் மீது, குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
