ADDED : மார் 09, 2026 04:31 AM

பா.மக., தலைவர் அன்புணி: மானாமதுரையில், கடந்த 6-ம் தேதி இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில், ஆகாஷ் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். கால் முறிந்த நிலையில், மருத்துவமனையில் ஆகாஷ் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து, மதுரை சிறைக்கு அழைத்து சென்றபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வழக்குகளை முறையாக விசாரித்து தண்டனை பெற்றுத் தருவதற்கு பதிலாக, கைதிகளை சித்ரவதை செய்து கொல்வது அதிகரித்து வருகிறது. தி.மு.க., ஆட்சியில், இதுவரை 27 'லாக் - அப்' மரணங்கள் நடந்துள்ளன.
அ.தி.மு.க., தலைமை: தி.மு.க., அரசின் கீழ், காவல் துறை எவ்வளவு அராஜகமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு, ஆகாஷ் உயிரிழந்தது உதாரணம்.
சமீபத்தில், திருப்புவனம் அஜித்குமார் 'லாக் - -அப்' மரணத்தின் போது, அவரின் பெற்றோரிடம், 'சாரிமா, இனி இதுபோல நடக்காது' என, முதல்வர் ஸ்டாலின் நாடகமாடி இருந்தார். இப்போது, மீண்டும் அதே சிவகங்கையில் மற்றுமொரு உயிர் பறிக்கப்பட்டிருப்பது, உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் உச்சம். காவல் துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர், அதை கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்ப்பது சாபக்கேடு.

