காளை முட்டி 28 பேர் காயம்; அதிர்ச்சியில் ஒருவர் பலி
காளை முட்டி 28 பேர் காயம்; அதிர்ச்சியில் ஒருவர் பலி
ADDED : பிப் 18, 2024 11:58 PM

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே தொடையூர் கிராமத்தில் சக்தி விநாயகர் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 9:00 மணிக்கு ஜல்லிக்கட்டு நடந்தது.
இதில், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து, 700 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றனர்.
வாடிவாசலிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்படும் காளைகளை வீரர்கள் அடக்கினர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும், சைக்கிள், கட்டில், பீரோ உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில், வீரர்கள், பார்வையாளர்கள் என, 28 பேர் காயம் அடைந்தனர். காயம்பட்டவர்களுக்கு அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலுாரைச் சேர்ந்த பார்வையாளர் ஆகாஷ், 23, என்பவருக்கு, மாடு முட்ட வருவதை கண்டு அதிர்ச்சியில் வலிப்பு ஏற்பட்டது. உடனே, 108 ஆம்புலன்சில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லும் வழியில் இறந்தார். வெள்ளனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

