மகளிர் உரிமைத்தொகை வழங்கக்கோரி புதிதாக 28 லட்சம் பெண்கள் விண்ணப்பம் டிச., 15 முதல் மாதம் ரூ.1,000 கிடைக்கும்
மகளிர் உரிமைத்தொகை வழங்கக்கோரி புதிதாக 28 லட்சம் பெண்கள் விண்ணப்பம் டிச., 15 முதல் மாதம் ரூ.1,000 கிடைக்கும்
ADDED : அக் 16, 2025 07:47 PM
சென்னை:“உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த பெண்களுக்கு, டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்,” என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
சட்டசபையில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான கேள்விகளுக்கு, துணை முதல்வர் உதயநிதி அளித்த பதில்: கடந்த 2023 செப்., 15ம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தில் கடந்த 26 மாதங்களாக, 1.14 கோடி பெண்களுக்கு, 30,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் ஒவ்வொருவருக்கும் இதுவரை, 26,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கூடுதலாக பெண்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக, சில விதிகளை முதல்வர் ஸ்டாலின் தளர்த்தி உள்ளார்.
உதாரணமாக, அரசு மானியத்தில் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்கள், முதியோர் உதவித்தொகை பெறும் குடும்பங்கள் ஆகியவற்றில், விதிகளை பூர்த்தி செய்யும் பெண்களுக்கும் உரிமைத்தொகை சேர்த்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இச்சூழலில், அரசின் சேவைகள் மக்களை தேடி சென்றடைய வேண்டுமென்ற நோக்கில், கடந்த ஜூன் 19ம் தேதி, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்.
நவ., 15 வரை 10,000 முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அக்., 15 வரை 9,055 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில், உரிமைத்தொகை வேண்டி, 28 லட்சம் மகளிர் விண்ணப்பித்துள்ளன ர்.
இந்த விண்ணப்பங்கள் வருவாய் துறை வழியே கள ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் நவம்பர் 30க்குள் முடிவடையும். அதன்பின் தகுதியான பெண்களுக்கு, டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.