விரல் ரேகை பதிவு செய்யாத 28 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள்
விரல் ரேகை பதிவு செய்யாத 28 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள்
ADDED : பிப் 25, 2026 04:03 AM

சென்னை: 'அந்தியோதயா, முன்னுரிமை ரேஷன் கார்டுகள் வைத்திருப்போர், விரல் ரேகை சரிபார்ப்பு வாயிலாக உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்' என, உணவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், 2.22 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.
இதில், 93 லட்சம் முன்னுரிமை கார்டுகள், 18.45 லட்சம் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கான அரிசி, கோதுமையை, மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது.
அதன்படி, முன்னுரிமை கார்டுக்கு, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா, 5 கிலோ அரிசியும்; அந்தியோதயா கார்டுக்கு, 35 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது.
இந்த இரு கார்டுகளிலும் மொத்தம், 3.65 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் உண்மை தன்மையை சரிபார்க்குமாறு, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும், 2024ல், மத்திய அரசு உத்தரவிட்டது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும் விற்பனை முனைய கருவியில், கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர் அனைவரின் விரல் ரேகை அல்லது கருவிழி பதிவு செய்யப்பட்டு, உண்மை தன்மை சரிபார்க்கப்படுகிறது. மொத்தம், 3.65 கோடி உறுப்பினர்களில் இன்னும், 28 லட்சம் பேர் தங்களின் விரல் ரேகை பதிவு செய்யாமல் உள்ளனர்.
உண்மை தன்மை சரிபார்ப்பு பணியை விரைந்து முடிக்குமாறு, மாநில அரசுகளிடம், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, 'அந்தியோதயா, முன்னுரிமை கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், ரேஷன் கடையில் விரல் ரேகை, கருவிழி சரிபார்ப்பு வாயிலாக, உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும்' என, தமிழக உணவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

