ADDED : பிப் 21, 2025 10:29 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே, இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 2.8 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கடல் வழியாக நாட்டுப்படகில் கடத்துவதற்காக மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி சரக்கு வாகனத்தில் சமையல் மஞ்சள் மூட்டைகள் கடத்தி வருவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் சத்திரக்குடி அருகே வாகன சோதனை ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த சரக்கு வாகனத்தை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய போது சரக்கு வாகனம் நிற்காமல் சென்றதால் வாகனத்தை  பிடிக்க விரட்டிய போது ராமநாதபுரம் அடுத்த  எட்டிவயல்  பகுதியில் வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடினர்.
வாகனத்தை சோதனை செய்த போது ரூ.5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையல் மஞ்சள் இருந்தது தெரிய வந்தது. மஞ்சள் மூட்டைகளை சரக்கு வாகனத்துடன்  பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

