சுருக்குமடி வலை தடுக்க கோரி 28 கிராம மீனவர்கள் மறியல்
சுருக்குமடி வலை தடுக்க கோரி 28 கிராம மீனவர்கள் மறியல்
ADDED : செப் 03, 2025 05:01 AM

மயிலாடுதுறை: சுருக்குமடி வலை பயன்பாட்டை தடுக்க கோரி, மயிலாடுதுறை அருகே மீனவர்கள் மறியலில் ஈடுபட்டதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவ கிராமங்களில், 400 விசைப்படகுகள், 5,000 பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில், பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி மீனவர்கள் சிலர், அதிவேக குதிரை திறன் கொண்ட இன்ஜின்கள் பொருத்திய படகுகளை பயன்படுத்தியும், தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியும் மீன்பிடிக்கின்றனர்.
இதனால் பிற மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, தரங்கம்பாடி, சின்னங்குடி, குட்டியாண்டியூர், பெருமாள் பேட்டை, வெள்ளகோயில் உள்ளிட்ட 28 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லாமல், தரங்கம்பாடி மற்றும் வானகிரி பகுதிகளில் படகுகளில் கருப்பு கொடி கட்டி கடற்கரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், சீர்காழி- -- நாகை தேசிய நெடுஞ்சாலையில் தரங்கம்பாடி கடைவீதி மற்றும் ராஜீவ்புரம் கடை வீதியில் போராட்டம் நடத்தினர். மீன்வளத்துறை அதிகாரிகள், போலீசார் பேச்சு நடத்தினர்.
நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர். இந்த போராட்டத்தால் சீர்காழி- -- நாகை தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.