292 மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங்; ரூ.5 லட்சம் வைப்பு தொகை கட்டாயம்
292 மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங்; ரூ.5 லட்சம் வைப்பு தொகை கட்டாயம்
ADDED : அக் 26, 2024 03:45 AM
சென்னை : 'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில், 292 இடங்கள் காலியாக உள்ள நிலையில், சிறப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்போர், 5 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை செலுத்த வேண்டும்' என, மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு, மூன்று கட்ட கவுன்சிலிங் நிறைவடைந்து உள்ளது.
பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரியில் ஒரு இடம்; சுயநிதி கல்லுாரிகளில் 67; தனியார் பல்கலையில், 61 என, 129 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
அதேபோல, அரசு பல் மருத்துவக் கல்லுாரியில் 23; சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் நான்கு; நிர்வாக ஒதுக்கீட்டில் 136 என மொத்தம், 163 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான சிறப்பு கவுன்சிலிங் நடந்து வருகிறது.
வரும் 28ம் தேதிக்குள் கவுன்சிலிங் முடிந்து, 29ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படும். இடங்கள் பெற்ற மாணவர்கள், நவம்பர், 5ம் தேதிக்குள், கல்லுாரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான சிறப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கு, 5 லட்சம் ரூபாய்; பி.டி.எஸ்., படிப்பிற்கு, 2 லட்சம் ரூபாய், கூடுதல் வைப்பு தொகை செலுத்த வேண்டும் என, மாநில மருத்துவ கல்வி சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.
கவுன்சிலிங்கில் இடங்கள் தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட கல்லுாரிகளில் சேராதவர்களுக்கு, அத்தொகை திருப்பி அளிக்கப்படாது. ஒதுக்கீடு பெற்ற கல்லுாரிகளில் சேருவோருக்கு, கல்விக் கட்டணத்தில், அத்தொகை கழித்து கொள்ளப்படும் என, சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.