1,674 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ரூ.294 கோடி
1,674 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ரூ.294 கோடி
ADDED : பிப் 24, 2024 02:36 AM
சென்னை:தமிழகத்தில், 35 மாவட்டங்களில், ஊரகப் பகுதிகளில், 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், 1,674 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை, 294.83 கோடி ரூபாயில் அமைக்க, முதல்வர் ஸ்டாலின் நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், செ.பாறைப்பட்டி ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்க, காமராஜர் அணை பகுதியில், 2.98 கோடி ரூபாயில், நீர் உறிஞ்சும் கிணறு அமைக்கும் பணியை, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 70 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில், 11.33 கோடி ரூபாயில் மேற்பார்வை கட்டுப்பாட்டுடன் கூடிய தரவு அளவுமானி பொருத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் வழியே, அனைத்து பகுதிகளுக்கும், சம கால இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்ய இயலும்.