ADDED : நவ 15, 2024 11:47 PM
சென்னை:சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரின் மருமகன் ஆதவ் அர்ஜுனா வீடு, அலுவலகங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள், இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர்.
கோவை, துடியலுாரைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின், சிக்கிம் மாநில அரசின் லாட்டரிகளை போலியாக அச்சடித்து, 910 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதேபோல, மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவில் முறைகேடாக லாட்டரி சீட்டு விற்று, 7.25 கோடி ரூபாய் சுருட்டியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதில் நடந்துள்ள சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் காலை 6:00 மணியில் இருந்து, இரவு 8:00 மணி வரை, கோவை துடியலுாரில் உள்ள மார்ட்டின் சொகுசு பங்களா, கார்ப்பரேட் அலுவலகம், மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லுாரி மற்றும் சென்னை போயஸ் கார்டன், கஸ்துாரி ரங்கன் சாலையில் உள்ள அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும், மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இரண்டாவது நாளாக, நேற்றும் காலை, 6:30 மணியில் இருந்து, மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு அளித்தனர்.

