2 ஆண்டில் 3 கமிஷனர் மாற்றம்; மாநகராட்சி பணியில் தடுமாற்றம்
2 ஆண்டில் 3 கமிஷனர் மாற்றம்; மாநகராட்சி பணியில் தடுமாற்றம்
ADDED : பிப் 11, 2025 03:28 AM
சேலம் : சேலம் மாநகராட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று கமிஷனர்கள் மாற்றப்பட்டிருப்பது, அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகராட்சியில் கமிஷனராக இருந்த கிறிஸ்துராஜ், 2023 மே மாதத்தில், திருப்பூர் கலெக்டராக பதவி உயர்வு பெற்றார். ஜூன் 8ல், பாலச்சந்தர் கமிஷனராக பதவியேற்று, ஓராண்டு மட்டுமே பணியில் இருந்த நிலையில், 2024 ஜூலையில் சென்னைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த ஜூலை 25ல், புதிய கமிஷனராக ரஞ்ஜீத்சிங் பதவியேற்றார். ஆறு மாதங்களே ஆன நிலையில், தற்போது ரஞ்ஜீத்சிங்கிற்கு, தேனி மாவட்ட கலெக்டராக பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இரு ஆண்டுகளுக்குள் மூன்று கமிஷனர்கள் மாற்றப்பட்டதால், நிர்வாக பணிகளில் தொடர்ந்து தடுமாற்றம் ஏற்பட்டு வருவதாக, பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
மாநகராட்சி நிர்வாக தலைமை பொறுப்பு வகிக்கும், கமிஷனர் பதவியில் அடிக்கடி ஆட்களை மாற்றுவது, பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். புதிதாக வரும் கமிஷனர், சேலம் மாநகராட்சி மற்றும் அதன் நிர்வாகம் ஆகியவற்றை தெரிந்து, புரிந்து நடவடிக்கை எடுப்பதற்கே மூன்று மாதங்களுக்கு மேலாகி விடும்.
தற்போதுள்ள கமிஷனர் ஆறே மாதத்தில் மாற்றப்பட்டுள்ளார். எனவே, அடுத்து வரும் கமிஷனராவது குறைந்தபட்சம் இரு ஆண்டுகளாவது பணிபுரிய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.