ADDED : மே 09, 2025 03:40 AM
சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, தொழில் அதிபர்கள் வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள், மூன்று நாட்களாக நடத்திய சோதனை நேற்று நிறைவடைந்தது.
சுற்றுச்சூழல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் தொடர்பாக, சுற்றுச்சூழல் துறை முன்னாள் அதிகாரி பாண்டியன் மற்றும் தொழில் அதிபர்கள் ஏ.கே.நாதன் உள்ளிட்டோர் மீது, அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக, கடந்த மூன்று நாட்களாக, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாண்டியன் வீடு, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி தெற்கு மாட தெருவில் உள்ள ஏ.கே.நாதன் வீடு, சென்னை கே.கே.நகரில் டாக்டர் வரதராஜன் வீடு, கோயம்பேடு பகுதியில், தொழில் அதிபர் குணசேகரன் வீடு உட்பட, 10 இடங்களில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
நேற்று சோதனை நிறைவடைந்தது. சோதனையில் சிக்கிய ஆவணங்கள், ரொக்கம் மற்றும் பொருட்கள் குறித்து, அமலாக்கத்துறை சார்பில், எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.