ADDED : நவ 26, 2024 11:39 PM
சென்னை:பள்ளி மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டும் வகையில், 10,000 ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க, சென்னை ஐ.ஐ.டி., உயர்கல்வி நிறுவனமும், பிரவர்த்தக் அமைப்பும் முன்வந்துள்ளன.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன், அறிவியலை சாமானியர்களுக்கு கொண்டு சேர்க்கும் அமைப்பான பிரவர்த்தக், சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அந்த வகையில், 'போத் பிரிட்ஜ்' என்ற அமைப்புடன் இணைந்து, மாணவர்களின் எதிர்காலம் குறித்த வழிகாட்டி நிகழ்ச்சிகளை, ஆசிரியர்களுக்கு நடத்த முன்வந்துள்ளது.
இதுகுறித்து, பிரவர்த்தக் அமைப்பின் ஆலோசகர் பாலமுரளி சங்கர் கூறியதாவது:
மாணவர்களின் பள்ளிப்பருவம் தான், தனித்திறமைகளை அடையாளம் காணும் பருவம். பெரும்பாலான ஆசிரியர்கள் படிப்பதற்கு மட்டுமே வழிகாட்டுவதால், அவர்களின் எதிர்காலம் வேலை தேடுவோராக மாறி விடுகிறது.
அதற்கு பதில், மாணவர்களின் விருப்பம், திறமை ஆகியவற்றை அடையாளம் கண்டு, அதுகுறித்த படிப்புகள், எதிர்கால வாய்ப்புகள், வங்கிக் கடன் வசதிகள், தொழில் படிப்புகள், சுயதொழில் வாய்ப்புகள் குறித்து வழிகாட்டினால், நாட்டிற்கு பல்துறை வல்லுனர்கள் கிடைப்பர்.
இதுகுறித்து விளக்கும் வகையில், நாடு முழுதும், 5,000 பள்ளிகளைச் சேர்ந்த 10,000 ஆசிரியர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, மூன்று நாட்கள் பயிற்சி அளிக்க உள்ளோம். இதில், பங்கேற்க விரும்புவோர், அடுத்த மாதம், 12ம் தேதிக்குள், https://bodhbridge.iitmpravartak.org.in என்ற இணைய இணைப்பின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.